தி. சதானந்தன், நிருபர், பாலாறு மீடியா
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை நல்லதொரு முன்னெடுப்பை செய்துள்ளது.
மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மய்யமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டி கையேட்டில் இதனை தெரிவித்துள்ளது.
சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளியில் நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
மாணவர் வாசிப்புத் திறனை உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை கண்காணிக்க வேண்டும்.
வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.
1 முதல் 12ஆம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.
இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும்.
இதுகுறித்து பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம் வளர்ந்து செல்போனில் மூழ்கிக் கிடக்கும் நம் குழந்தைகள், பள்ளிப் பாடங்களை தாண்டி வாசிப்புத்திறனையும், கற்பனைத் திறனையும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு வெற்றி பெற பாலாறு பதிப்பகம் வாழ்த்துகிறது. ஆனால் இந்த புத்தகங்களை அலமாரகளில் அடுக்கி அழுகு பார்க்காமல், வகுப்பறகளிலும், மாணவர்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்றும் படிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும். செய்யுமா கல்வித்துறை? பொருத்திருந்து பார்ப்போம்!!
