தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்த முதலாம் இராசராச சோழன் சிலை
முதலாம் இராசராச சோழன் என்றழைக்கப்பட்ட சோழ அரசன் சோழர்களின் சிறப்பின் சின்னமாக விளங்கும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயிலின் கட்டுமான வேலைகள் முதலாம் இராசராச சோழனின் 19 ஆவது ஆட்சியாண்டில் துவக்கப்பட்டு (பொ.ஊ. 1003-1004), அவனது 25 ஆவது ஆட்சியாண்டில் முடிவுற்றது (பொ.ஊ. 1009–1010). கோயிலின் வரைதிட்டத்தில், ஆள்கூற்று முறைமை, சமச்சீர்மை வடிவவியல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.இதைத் தொடர்ந்து அடுத்த இரு நூற்றாண்டுகள் வரை கட்டப்பட்டக் கோயில்கள், சோழர்காலத்தில் செல்வத்திலும், கலையிலும் சிறப்புற்று விளங்கியதற்குச் சான்றாகவுள்ளன. சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக சதுரப் போதிகைகள் கொண்ட பன்முகத் தூண்கள் காணப்படுகின்றன.
தனித்துவமான திராவிடகட்டிடக்கலைக்கும், சோழர்களின் ஆட்சி மற்றும் தமிழ் மக்களின் நாகரிகத்திற்கும் சான்றாக அமைந்துள்ள இக்கோயில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
இடைக்காலச் சோழர்கள்:
பொ.ஊ. 985 முதல் 1070 வரை சோழர் கலை உயர்வடைந்து உச்ச நிலையில் இருந்தது. இடைக்காலச் சோழர் காலத்தில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன. பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.
பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்
காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் இராசராசனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராசராசன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராசராச சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.
திருவிடைமருதூர்க் கோவிலில் உள்ள மூலவரின் பெயர் மகாலிங்கம். இராசராச சோழனின் பெயருக்கு ஏற்றார் போல் அந்த விக்கிரகம் இல்லை என்று எண்ணம். பின்னாளில் பெருவுடையார் என்ற பெயருக்கு ஏற்ப லிங்கமும் கோவிலும் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இக்கோயிலைக் கட்டத் தூண்டியது என்றும் ஓர் செய்தி உண்டு.
கட்டமைப்பு:
இராசராச சோழன் கருவூர் தேவருடன்
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இலேபட்சி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. முதன்மைக் கடவுளான இலிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. வெளிப் பிரகாரம் 240 மீ. x 125 மீ. அளவிலானது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் பாண்டியர்களால் 13 ஆம் நூற்றாண்டில் அம்மன் சன்னிதியும் விசயநகர அரசர்களால் முருகர் சன்னிதியும் கட்டப்பட்டு, மராத்திய அரசர்களால் விநாயகர் சன்னிதி புதுப்பிக்கப்பட்டது. தஞ்சை நாயக்கர்களாலும் இக்கோயில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
