இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாயின் சுயசரிதை புத்தகமான ஐ ஆம் மலாலா, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி உள்பட 4 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.பெண் கல்விக்காகக் குரல் கொடுத்ததால் தாலிபன் தீவிரவாதிகளால் கடுமையாகத் தாக்கப் பட்டவர் பாகிஸ்தான் சிறுமி மலாலா. சிகிச்சைக்காக லண்டன் சென்ற மலாலா, தற்போது பெண் கல்வியை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.தாலிபன்களால் தாக்கப்பட்டதையும், அதிலிருந்து மீண்டதையும் ஐ ஆம் மலாலா என்ற தனது சுயசரிதைப் புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளார். ஐ.நா பொது அவையில் மலாலா உரையாற்றிய பின்னர் மலாலா தினம் குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலாலாவின் புத்தகம் உலக வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியரான கைலாஷூடன் பகிர்ந்து கொள்கிறார் மலாலா. இதனால் மலாலாவின் சுயசரிதையைப் படிப்பதில் மக்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது. எனவே, தற்போது தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராத்தி என நான்கு இந்திய மொழிகளில் மலாலாவின் சுயசரிதைப் புத்தகம் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்புத்தகம் அக்ருதி பதிப்பகத்தால் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது. மற்ற மொழிகளிலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.