சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நேர்காணல் செய்ய விரும்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அண்ணாமலையின் வாழ்த்து தனக்கு தேவையில்லை என்று கூறியுள்ள காயத்ரி ரகுராம், நேர்காணலுக்கு வெளியே வந்து என்னை எதிர்கொள்ள தயாரா என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வகித்து வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார்.இதனைத் தொடர்ந்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாஜகவில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சில மாதங்களாக ஹனி டிராப் குறித்து ஊடகங்களில் பேசப்படுகிறது. இது பெண்களுக்கு மிக அபாயகரமான விஷயம் என்று குற்றம்சாட்டினார்.தம்பி அண்ணாமலை.. காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க.. கனிமொழி கேள்வி! அதேபோல் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நேரடியாகவும், ட்விட்டர் வாயிலாகவும் முன்வைத்து வருகிறார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பிய போது, எங்கு சென்றாலும் காயத்ரி ரகுராம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். காயத்ரி ரகுராம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு, எந்த பதிலையும் அண்ணாமலை அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நேர்காணல் நடத்த விரும்புவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நேருக்கு நேராக நேர்காணல் நடத்த விரும்புகிறேன். அண்ணாமலை என்னை எதிர்கொள்ள தயாரா? உண்மையை உலகம் அறிந்து கொள்ளட்டும். எனக்கு உங்களின் வாழ்த்து தேவையில்லை. என்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு மட்டுமே தேவை. அதுமட்டுமல்லாமல், நான் ராஜினாமா செய்யும் முடிவை எடுப்பதற்கு முன் நீங்கள் ஒருமுறை கூட என்னை வாழ்த்தியதில்லை. என்னைப் பற்றி கீழ்த்தரமாக பேசியதற்கும், வீடியோ, ஆடியோ, புகைப்படம் விவகாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கும் எனக்கும் இடையில் நடக்கும் யுத்தம். கட்சிக்காக நான் உழைத்து பாஜகவின் உண்மையான தொண்டர்களுக்கும், மூத்த தலைவர்களுக்கும் நன்றாக தெரியும். எத்தனை ஆண்டுகளாக எனது குடும்பம் பாஜகவில் இருக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அண்ணாமலை மட்டுமே என்னை திமுக ஆதரவாளராக பிராண்ட் செய்துள்ளார் என்று தெரிவித்தார்.