தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளட்ட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்குத் திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 20ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று நண்பகல் வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் தென்மாவட்ட கடலோரம், மன்னார்வளைகுடா, குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுவீசும் என்றும், இதனால் மீனவர்கள் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.