நமது நிருபர், பாலாறு மீடியா
மதுரை, செப். 20: விருதுநகரில் 3-ஆவது புத்தகத் திருவிழா வருகிற 27-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்தார்.
விருதுநகா்-மதுரை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் 12 நாட்களுக்கு, காலை, மாலை என இருவேளையும் இத் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தப் புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், சிறப்பான முன்னெடுப்பை எடுத்து வருகிறார்.
புத்தகக் காட்சிக்கு அதிக மக்களை வரவழைத்து அவர்களை வாசகர்களாக மாற்றும் இலக்கிற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை குறு மாரத்தான் போட்டி நடைபெற்றது. விருநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குறு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக 10 கி.மீ தூரம் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ஆண்களுக்கான பிரிவில் முதலிடம் பிடித்த ராஜபாளையத்தைச் சோ்ந்த கே. மாரி சரத்துக்கு ரூ.10 ஆயிரமும், 2-ஆவது இடம் பிடித்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த கே.ராமருக்கு ரூ.7,500-ம், 3-ஆவது இடம் பிடித்த தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த சி.கண்ணனுக்கு ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் பரிசாக வழங்கி பாராட்டினார்.
இந்தப் போட்டியில் ஆா்வமுடன் பங்கேற்ற விஷ்ணு பிரவீன் என்ற சிறுவனுக்கு ரூ. 2000 சிறப்பு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் ஆட்சியரால் வழங்கப்பட்டன. ஆண், பெண்கள் பிரிவில் பங்கேற்ற 6 பேருக்கு சிறப்பு பரிசாக சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ரா.தண்டபானி, மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலா் அனிதா, மாவட்ட விளையாட்டு அலுவலா் குமாரமணிமாறன் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள், மாணவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
இந்த புத்தகக் கண்காட்சி, மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் எனப்படும் பபாசி அமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்றன.
கண்காட்சியை ஒட்டி, கல்லூரி, மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சு போட்டிகளும் நடத்தவும், விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகளை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் எமது நிருபரிடம் தெரிவித்தார்.
(இதுபோன்ற செய்திகளுக்கு www.paalaru.com இணையதளத்தை காணவும். மேலும் உங்கள் செய்திகள், கட்டுரைகள், படைப்புகளை [email protected] இமெயிலுக்கு அனுப்பவும். )
