நமது நிருபர், பாலாறு மீடியா
மதுரை, செப் 17: மதுரை மாநகரில் கடந்த 12 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 3.50 கோடிக்கு வணிகம் நடைபெற்றதாக மாவட்ட பொதுநூலகத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மாவட்ட நிா்வாகம், பொது நூலக இயக்ககம் , பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் ஆகியன சாா்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் செப். 17ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்றது.
231 அரங்குகளில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்களின் வெளியீடுகள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அனைத்து அரங்கிலும் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருந்தது. மற்ற நாட்களில் வழ க்கமான பார்வையாளர்கள் கண்காட்சிக்கு வந்திருந்தனர்.
வாசகர்களை கவரும் விதத்தில் ஒரு சில அரங்குகளில் புத்தகங்களுக்கு 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கப்பட்டன. மேலும், ஒரு புத்தகம் வாங்கினால் மற்றொரு புத்தகம் இலவசம் என்ற நூதன சலுகையும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுமக்கள், மாணவா்கள், வரலாற்று ஆா்வலா்கள், சிறாா்கள், ஆன்மிகப் பற்றாளா்கள், குறிப்பாக புத்தக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரின் புத்தகத் தேவையையும் நிறைவு செய்யும் வகையில் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும், பொதுமக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இங்கு தினமும் மாலை நேரத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள், நாட்டுப்புறக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன..
இறுதி நாளான செப்டம்பர் 17ம் தேதி பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் , பாா்வையாளா்கள் வருகை குறைந்திருந்தது. இருப்பினும், பதிப்பாளர்கள் மனம் தளராமல் விற்பனையை தொடர்ந்தனர். பெரும்பாலும் காலை, மாலை நேரங்களில் பாா்வையாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.
கண்காட்சி நடைபெற்ற 12 நாள்களில் ஏறத்தாழ 42 ஆயிரம் மாணவ, மாணவிகளும், 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாள ர்களும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்றதாக மாவட்ட நிா்வாகமும், பொதுநூலகத்துறையும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சுமார் ரூ.3.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானதாக பதிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிறைவு நாள் நிகழ்ச்சியில், புத்தகத் திருவிழா போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், கலைஞா்கள், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவா்கள், புத்தகத் திருவிழா பணிகளில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலா்கள், நாட்டுநலப் பணித் திட்டத்தினா், செஞ்சிலுவைச் சங்கத்தினா், தன்னாா்வலா்கள் ஆகியோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன.
சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் இளையதலைமுறையினர் வாசிப்பு பழக்கத்தை கைவிட்டுவிட்டனர் என்று சொல்லக் கூடிய வாதத்தை முறியடிக்கும் வகையில், தற்போதும் மதுரை புத்தகக் கண்காட்சியில் ரூ. 3.50 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனை நடந்துள்ளது ஓரளவு மனநிறைவை தந்துள்ளதாகவும், கண்காட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அரங்குகளை அமைத்திருந்த பதிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற செய்திகளுக்கு www.paalaru.com என்ற இணையதளத்தை காணவும். தங்கள் செய்திகள், கட்டுரைகள், படைப்புகளை பாலாறு நியூஸ் மீடியா நிறுவன வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (9790750415) அனுப்பவும். அட்மின், பாலாறு மீடியா.
