உலக தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு நேற்று சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அடையாறு விஎச்எஸ் மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்போது தற்கொலை தடுப்பதற்காக, சமூகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தனிமனிதனின் பொறுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில ‘சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் தலைவர் நல்லி குப்புசாமி, விஎச்எஸ் மருத்துவமனை செயலர் டாக்டர் சுரேஷ், மனநல மருத்துவர்களும், சிநேகா அமைப்பின் நிறுவனர்களுமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், டாக்டர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
அப்போது பேசிய டாக்டர் லட்சுமி விஜயகுமார், ‘எந்த பிரச்னையாக இருந்தாலும் சோர்ந்து போய்விடாமல் அதற்கான தீர்வை தேட வேண்டும். அதை நம்மால் செய்ய முடியாத போது குடும்பத்தினர் அல்லது மிகவும் நல்ல, நம்பிக்கையானவர்களின் உதவியை நாடலாம். அவர்கள் நமக்கு உதவிச் செய்வார்கள். அப்படி முடியாவிட்டால் மனநல மருத்துவர்களை, ஆலோசகர்களை அணுகலாம். எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது.
பதற்றப்படாமல் அதை அணுக வேண்டியது அவசியம். அதே நேரத்தில் தற்கொலை எந்த பிரச்னைக்கும் சரியான தீர்வு கிடையாது. தேவைப்பட்டால் சிநேகாவின் 24மணிே நேர தொலைபேசி சேவையை 044-24640050 என்ற எண்ணில் பேசி தீர்வை நோக்கி நகரலாம். தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.
அதேபோல் தற்கொலை குறித்த செய்திகளை கையாளுவதில் கவனம் வேண்டும். தற்கொலை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்புவதை தவிர்க்க வேண்டும்.’ என்றார்.
