கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வீடுகள் தோறும் மக்கள் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபட்டனர். தீபாவளி பண்டிகைக்குப் பின்னர் கந்த சஷ்டி கொண்டாட்டம் அதைத் தொடர்ந்து கார்த்திகை தீபத் திருநாள் என தமிழ்நாட்டில் ஒரே பண்டிக்கைக் காலமாக உள்ளது. பழனி, திருப்பரங்குன்றத்தில் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப விழா நேற்று மாலை முதலே கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளை சுத்தம் செய்த மக்கள் வாசல்களில் வண்ண கோலமிட்டு விளக்குகளை ஏற்றி வைத்தனர். வீதிகள் எங்கும் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இன்றைய தினம் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் வீடுகள் தோறும் விளக்குகளை ஏற்றி மக்கள் ஜோதி வடிவான இறைவனை வழிபட்டனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த வாரம் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் காலை தங்க சப்பர வாகனத்திலும், இரவில் தங்க மயில் வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கார்த்திகை தீப திருவிழாவான இன்றைய தினம் கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப் பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். பதினாறு கால் மண்டபத்தில் இருந்து கீழரத வீதி, பெரிய ரத வீதி, மேல ரத வீதிகளில் தேர் வலம் வந்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபம் ஏற்றப்பபட்டது. அதே நேரத்தில் கோவில் மணி ஓசை ஒலித்ததும் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட தாமிர கொப்பரையில் 350 லிட்டர் நெய், 150 மீட்டர் நீளமுள்ள கடா துணியில் தயாரிக்கப்பட்ட திரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதனையடுத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. திருத்தணி, பழமுதிர்சோலை, வடபழனி முருகன் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது.