நமது நிருபர், பாலாறு மீடியா.
சென்னை, நவ.20: சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா-2025, ஜனவரி 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இப் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புத்தக நிறுவனங்கள், பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
நூலகச் செம்மல் டாக்டர் ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா-2025 அறிமுக விழா ஆகியவை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய நூலகர்கள் 38 பேருக்கு ஆர்.அரங்கநாதன் விருதுகள் மற்றும் மாவட்ட நூலகர்களுக்கு கையடக்க மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் சங்கர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதுமதி, நூலக ஆணைக்குழுத் தலைவர் கோபண்ணா, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுவின் தலைவர் மனுஷ்ய புத்ரன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விருதுகள் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:
“தமிழை உலகுக்கும், உலகை தமிழுக்கும்” என உயர்ந்த இலக்குடன் பொது நூலக இயக்ககம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா கடந்த 2023ம் ஆண்டு முதல் தமிழக அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டில் நடத்தப்பட்ட சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 40 நாடுகள் பங்கேற்றதுடன் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து 2025ம் ஆண்டுக்கான சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது. அதில் இத்தாலியை சேர்ந்த பொலோனியா பன்னாட்டு குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு பதிப்பகங்கள் கலந்து கொள்ள இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டதில், 86 லட்சத்து 44 ஆயிரத்து 190 பொதுமக்கள் பார்வையிட்டு அதில் ரூ.69 கோடியே 20 லட்சம் மதிப்பில், 81 லட்சத்து 44 ஆயிரத்து 525 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது போல, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.6 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகம் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. இதுதவிர கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி, ஈரோடு மாவட்டத்தில் புதியதாக மாவட்ட மைய நூலகம் கட்டப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
