3-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024 பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். சகோதர மாநிலமான கர்நாடகத்தை, குறிப்பாக பெங்களூர் மாநகரினை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது வரலாறு.
அங்கு ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு வணிகம், தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழர்கள் புலம்பெயர்ந்து அங்கேயே தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தாலும், தாய்த் தமிழைத்தான் பெரும்பாலான மக்கள் பேசியும், எழுதியும் வருகின்றனர்.
வருங்கால சந்ததியினர் தங்களது வேர்களை மறுந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழ்ப் புத்தகத் திருவிழா என்னும் அடித்தளமான பணியை அங்குள்ள தமிழர்களும், குறிப்பாக பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்முயற்சியில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் வருகிற டிசம்பர் மாதம் 3வது புத்தகக் கண்காட்சியை 10 நாட்களுக்கு பெரும் திருவிழா போல நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்கள், குறிப்பாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை தூண்டவும், செம்மொழியான தமிழை உலகமெலாம் பரவச் செய்திடவும், தமிழ்க் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை பறைசாற்றிடவும், தமிழர்கள் ஒன்றுகூடலுக்காகவும் இந்த புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
டிசம்பர் 20ம் தேதி தொடங்கி 29 ம் தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தினமும் மாலையில் கலைநிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள் அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு வருகின்றன.
பெங்களூருவில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் வீதியில் உள்ள பொறியியல் கல்லூரி (தி இன்ஸ்டிடுயூஷன் ஆஃப் எஞ்சினியர்ஸ்) வளாகத்தில் இக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
குடும்பம் குடும்பமாக வாருங்கள்! தமிழ்ப் படைப்புகளை வாசித்தும், வாங்கியும் செல்லுங்கள்! என கண்காட்சி அமைப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான முத்துமணி நன்னன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான மேல் விவரங்களை 6363118988 என்ற எண்ணிலும், [email protected] என்ற இமெயில் முகவரி மூலம் தொடர்பு கொள்ள கண்காட்சி குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
