உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – நோக்கவுரை!
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – நோக்கவுரை!
பெருமதிப்பிற்குரிய் தனிநாயக அடிகளார் , தமிழ்மொழியின் பெருமைகளைத் தாயகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் மட்டுமன்றி, அயலகத்தில் வாழ்ந்துவரும் தமிழரல்லாத பிற உலக மக்களும் அறிந்து போற்றிட வேண்டும் என்று மாபெரும் தமிழ்க் கனவு கண்டார் . அதற்குத் தமிழறிந்த அறிஞர்கள் பலரும் , உலகளாவிய ஆராய்ச்சி செய்து, தமிழ்மொழியின் பெருமைகளை உலகத்தினர் அனைவருக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று விரும்பினார் .
அதற்காகவே உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பதனைத் தொடங்கி, முதலாம் உலகத் தமிழ் மாநாட்டை, மலேசியாவின் கோலாலம்பூரிலே சிறப்பாக நடத்தினார் . தனியானதோர் ஆராய்ச்சி இதழையும் இதற்கென நடத்தினார் .
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை, அறிஞர் அண்ணா அவர்கள் , 29 நாடுகளிலிருந்து அயலக அறிஞர்கள் பலரையும் அழைத்து வந்து, மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார் . ஆய்வரங்குகளில் , தமிழியல் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சித் தாள்கள் , சிறப்பான ஆய்வாளர்களைக் கொண்டு விவாதிக்கப்பட்டன. அவை
யாவற்றையும் தொகுத்து வெளியிட்டு, அவற்றுக்குத் தொகுப்புரையாக அறிஞர் அண்ணாவே ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் குறிப்புகளின் மீது, இங்கிலாந்து நாட்டின் அறிஞர் பேரா. ஆஷர் அவர்கள் , இது போல் ஓர் ஆய்வுத் தொகுப்புரை இவ்வளவு சிறப்பாக இதுவரை எழுதப்பட்டதில்லை, இனியும் எழுதப்படூமா என்பது ஐயப்பாடு தான் என்று சிறப்புக் குறிப்பு எழுதினார் . இரண்டாவது மாநாட்டிலே பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்பும் , சிறப்பான கலைநிகழ்ச்சிகள் பலவும் , பொது அரங்கில் நிகழ்ந்தேறின. 11 தமிழறிஞர்களின் திருவுருவச் சிலைகள் திறக்கப்பட்டன. உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த விழாவாக அத்தமிழ் விழா நடந்தேறியதை நானே என் கண்ணால் கண்டு களித்தேன் .
மூன்றாம் மாநாடு பிரான்சின் தலைநகர் பாரீசிலும் , நான்காம் மாநாடு ஈழத்தின் யாழ்ப்பாணத்திலும் உலகத் தமிழறிஞர்கள் ஒருங்குகூடிச் சிறப்புற நடைபெற்றன. அதன் பின்னர் நடந்த சிலபல மாநாடுகள் , அரசியல் கலப்பின் காரணமாக, ஆய்வுத் தரம் குறைந்ததாகவே கருதப்பட்டன.
2019-இல் நடைபெற்ற பத்தாவது மாநாட்டில் , அமெரிக்கப் பெரும் பல்கலைக்கழகங்கள் – சிகாகோ, ஆர்வார்டு, பென்சில்வேனியா, பெர்க்லி, மற்றும் செருமனியின் கொலோன் பல்கலைக்கழகம் யாவும் இணைந்து, உலக ஆய்வுத் தரத்திலே சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தோம் . ஆனால் சிலர் , சொந்த விருப்புவெறுப்பு காரணமாக, ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுத்தாள்களே மாநாட்டில் இடம்பெற வேண்டும் என்ற பல்கலைக்கழக நெறிமுறையை ஒப்புக்கொள்ள மாட்டாது, தன்னல நோக்கங்களால் பொறுப்பை வலிந்து கைப்பற்றிக் கொண்டனர் . அவர்கள் யார் என்பதே தெரியாத காரணத்தால் , இச்சீரிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கத் தயங்கின. சிகாகோவில் நடந்த மாநாட்டிற்குச் சிகாகோ பல்கலைக்கழகமே பங்கேற்க முடியாத அவலநிலை உருவானது.
முதன்மைமிக்க அயலகப் பல்கலைக்கழகங்களில் இருந்து ஆய்வுக்கட்டூரைகள் வரவில்லை என்றதும் , நமது தாயகங்களிலிருந்து ஆய்வுத்தாள்கள் எழுதியனுப்பிட வேண்டுகோள் விடுத்தோம் . கட்டுரைகள் குவிந்தன. உலகத் தரமான கட்டுரைகள் ஒருசிலவே இருப்பினும் , அனைவரையும் பெரும் பொருட்செலவில் அமெரிக்கா வரவழைத்து, ஒரு பெரும் தமிழர் மாநாடாக நடத்தினோம் . கடைசியில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவும் பொருளுதவியும் கிடைத்தது. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டுவிழா, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா என்று முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டதில் பெருங்கூட்டம் கூடியது. ஆராய்ச்சி மாநாட்டின் உலகத்தரம் சற்றுக் குறைவாகவே இருப்பினும் , பெருமளவு உலகத் தமிழர்கள் கூடியது மிக்க ஆறுதலைத் தந்தது.
ஆனால் அதே மாநாட்டில் , அதே தன்னலம் மிக்க சிலரால் , உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தையே பிளவுபடுத்தும் கூட்டமும் நடத்தப்பட்டு, இப்போது மலேசியாவில் ஒரு மாநாடும் , சென்னையில் ஒரு கூட்டமுமாகப் பிளவுபட்டு நடக்கின்றது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் , ஒரு சிறந்த அயலகத் தமிழறிஞரைத் தலைமைப் பொறுப்பு ஏற்கச்செய்ய வேண்டும் . உலகத் தமிழ் மாநாடு, அதன் பேரில் உள்ளது போலவே, உலகளாவிய முறையில் நடந்தால் தான் , தமிழ்மொழியின் சீர்மை உலகமெலாம் பரவும் . உலகப் பல்கலைக்கழகங்களில் தரம் வாய்ந்த தமிழாராய்ச்சி பெருகும் . அதுவே தனிநாயக அடிகளாரின் மாபெரும் தமிழ்க் கனவு. அக்கனவை நனவாக்க நாம் பணிகளைத் தொடரவேண்டும் . அரசியல் மாநாடுகளும் , தன்னலம் மிக்க தனிப்பட்டோர் நடத்தும் கூட்டங்களும் , தமிழியலின் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்பதே அறிஞர் பெருமக்களின் கருத்தாகவுள்ளது. அதைச் செவிமடுத்து,
இனிவரும் காலத்தில் அடிகளாரின் உலகத் தமிழ்க் கனவை நனவாக்குவோம் .
– சோம. இளங்கோவன்
ஒருங்கிணைப்பாளர்
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ, அமெரிக்கா.
நாள் : சூலை 10, 2023.