
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகள் புதிய தகவல்களை தருகின்றன. குறிப்பாக விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இருந்ததை உறுதி செய்கிறது.
நான்காம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தொடங்குகிறது .விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் வட்டாரத்தில் உள்ள ஆலகிராம விநாயகர் தமிழகத்திலேயே பழமையான விநாயகர் மூத்தவர்’ என, தொல்லியல் அறிஞரும் கல்வெட்டு ஆய்வாளருமான விழுப்புரம் திரு.வீரராகவன் கருதுகிறார். இதற்கு அடுத்ததாக 6 ஆம் நூற்றாண்டின் பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்குவதாக கருதலாம் அதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் அங்கு காணப்படுகின்றன.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகப்பழமையான விநாயகர் சிலை உள்ளதை கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் , கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் பல்வேறு வரலாற்று சிறப்புக்களைக் கொண்ட தட்டக்கல் ஊரில் நாராயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொண்ட போது கண்டறிந்தது.
தட்டக்கல் கூத்தாண்டவர் கோவில் அருகே வெளிப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை கண்டு அதன் பழமை வடிவத்தை காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கினார் . மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் சிலை பல்லவர் காலத்து விநாயகர் உருவமைப்பு போல் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் இப்பகுதியை கங்கர்கள் ஆண்டதற்கான கல்வெட்டுகள் இப்பகுதியில் கிடைத்திருக்கின்றன. எனவே கங்கர் கால விநாயகருக்கான இலக்கணங்கள் கொண்டுள்ளன.
இரண்டரை அடி உயரமுள்ள கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. குட்டியானையின் தலையும் குட்டி மகுடமும் சிறிய காதுகளும் நான்கு கரங்களும் உள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்தநிலை அமைப்பு வழக்கமாக லலிதானசனமாக இல்லாமல் பத்மாசனமாக ,தாமரை இதழ்மேல் அமர்ந்த நிலையில் தோன்றுவது சிறப்பு . இந்த சிலை 8 ஆம் நூற்றாண்டை சேர்த்ததாக இருக்க வாய்புண்டு என காப்பாச்சியர் தெரிவித்தார்.
பல்லவமன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் இப்பகுதியை பல்லவர்களுடன் கூட்டணியில் இருந்து கங்கர்கள் ஆட்சிபுரிந்ததை வரலாற்று ஆதாரமாக கொள்ளலாம் (825-850). அதன்படி பார்த்தால் காப்பாச்சியர் கூறுவது போல் 1200 வருடங்கள் பழமையானதாக இருக்கும். தமிழக விநாயகர் சிலைப் பற்றிய ஆய்வில் இது முக்கிய இடத்தை பெறும் என ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறினார் .தற்போது ஊர் கவுண்டர் அந்த சிலையை பாதுகாப்பாக ஊர் கோவிலில் பாதுகாப்பாக வைத்துள்ளது பாராட்ட த்தக்கது.
மாருதி மனோகரன். விஜயகுமார், வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாயசங்கத் தலைவர் கோவிந்தராஜ், சுதர்சன், சவுந்தர்யா தமிழசெல்வன் ஆகியோர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.