நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா
திருச்சி, அக். 03: புத்தகம் எழுதும் மாணவர்களுக்கான ஒரு நேரடி பயிற்சிப் பட்டறை திருச்சி மாவட்டம்,
அய்யம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் (10.8.2024 சனிக்கிழமை) நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் எழுத்துப் பணி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களின் படைப்பை பட்டைத் தீட்டி செம்மைப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
எழுதுக இயக்கத்தின் பொறுப்பாளர் லாவண்யா தலைமையில் இந்த நேரடிப் பயிற்சியை குழு எண் 8 -ன் ஒருங்கிணைப்பாளர் விஜயராணி ஒருங்கிணைத்து நடத்தினார். வழிகாட்டி ஆசிரியர் கரூரிலிருந்து வந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கினார்.
களப் பணி திறனை வளர்த்துக் கொள்ளுதல்: மாணவர்களுக்கு அண்ணாந்து பார்த்த எறும்பு என்னும் தலைப்பில் பட்டாம் பூச்சியின் பலவிதமான பருவங்களைப் பற்றியும் அந்த பருவங்களை முழுமையாகக் கடந்த பிறகுதான் பட்டாம்பூச்சி வானத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பிக்கும். அதன் அழகை அனைவரும் அப்பொழுதுதான் அண்ணார்ந்து பார்ப்பார்கள். அது போல மாணவர்களும் இந்த புத்தகம் எழுதும் தருணத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி களப்பணி செய்வது, தினமும் புத்தகம் வாசிப்பது, நோட்டுப் புத்தகத்தில் எழுதுவது போன்ற படிநிலைகளைக் கடந்தால்தான் ஒரு தரமான புத்தகத்தை உங்களால் வழங்க முடியும். அப்பொழுதுதான் அனைவரும் உங்களை அண்ணாந்து பார்ப்பார்கள் என்று அண்ணாந்து பார்த்த எறும்பு கதையின் வாயிலாக மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் களப் பணியின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தப்பட்டது.
பெற்றோர் உதவியுடன் களப் பணி: இதில் கலந்து கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் களப்பணி பற்றி எடுத்துரைத்து அவர்களின் பிள்ளைகள் சிறப்பாக எழுத அவர்களுக்கு நேர்காணல் உள்ளிட்ட களப் பணிகளில் உதவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்பொழுதுதான் இந்த மாணவர்கள் புத்தகம் தரமானதாக இருக்கும் என்று விளக்கப்பட்டது. இதை அந்த பெற்றோர்கள் தெளிவாகப் புரிந்து செயல்படவும் தொடங்கிவிட்டனர் எனலாம்.
செயல்பாட்டு ஆலோசனைகள்: சுடோகு புத்தகம் எழுதும் மாணவி கலையரசிக்கு அதே இடத்தில் களப்பணி செய்ய வழிவகை செய்யப்பட்டது. மாணவி இளமதி தனது புத்தகத்தில் திருவிழாவில் தன்னுடைய தாய் தைத்துக் கொடுத்த ஆடையை அணிந்திருந்த தகவலை பதிவு செய்திருந்தார். அவர் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள அதே ஆடையை அணிந்து வந்திருந்தார் என்பது அவர் கதையுடன் ஒன்றியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
எனது பள்ளி என்ற தலைப்பில் எழுதும் மாணவி சன்முகிலுடன் கலந்துரையாடி அவருடைய சந்தேகங்களை தெளிவுபடுத்தி களப் பணியுடன் சிறப்பாக புத்தகம் எழுத அறிவுரை வழங்கப்பட்டது.
கார்கில் போர் நினைவு தினம் – சான்றிதழ் வழங்குதல்: கடந்த ஜூலை 26 கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு எழுதுக குழு 8 -ல் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் புத்தகமும் வழங்கப்பட்டன.
இந்த நேரடிப் பயிற்சியானது கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக புத்தகத்தை சிறப்பாக எழுதி முடிக்க வேண்டும் என்ற புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது.
தகவல்: எழுதுக அமைப்பு- புத்தகம் படிக்க! படைக்க..!
