கர்நாடக இசை உலகில் முடிசூடா ராணியாகக் கம்பீரமாகப் பவனி வந்த எம் எஸ் சுப்புலட்சுமி அம்மாள், அந்தக் காலத்திலேயே பத்திரிகையாளர்களுக்கு உதவி புரிந்து அவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர். நூருல்லா அவர்கள், தன்னுடைய பதிவில் இதை நன்றி பாராட்டும் வகையில் கூறியுள்ளார். இதன் விவரம்:
குயிலே குடியிருக்கும் சுப்புலட்சுமியின் குரலின் இனிமைக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் உண்டு. வெளிநாடுகளில் பாட்டுக் கச்சேரி நடத்த எம்எஸ் சுப்புலட்சுமி சென்றால் பக்கத்து நாடுகளில் உள்ள ரசிகர்கள் கூட, விமானத்தைப் பிடித்து வந்துவிடுவர். அந்த பாட்டுக் கச்சேரியில் அமர்ந்து எம்எஸ் சுப்புலட்சுமியின் குரலிசையில் லயித்துச் செல்வது வழக்கம்.
அந்த அளவுக்கு உலகமெங்கும் தனது இசைக் குரலால் வெற்றிக்கொடி நாட்டியவர் தான் எம் எஸ் சுப்புலட்சுமி. அவரின் இசைக் கச்சேரிகளால் பலனடைந்தவர்கள் ஏராளம். என்றாலும் அதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றுண்டு.
சென்னை பத்திரிகையாளர்களும் அவரின் இசைக் கச்சேரியால் பலன் பெற்றுள்ளனர். சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் ரிச்சி தெருவில் ஒரு கட்டிடம் இப்போதும் இருக்கிறது .அந்தக் கட்டிடத்தில் தான் எம்யூ ஜே எனும் மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் என்ற பத்திரிக்கையாளர் அமைப்பின் அலுவலகம் செயல்படுகிறது.
அந்த அலுவலகத்தின் கட்டிடம் பிரம்மாண்டமானது. தரைத் தளத்திற்கு மேல் இரண்டு மாடிகள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றில் சில கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் உரிமை கொண்ட அமைப்பு எஸ் ஐ ஜே எஃப் எனும் தென்னகப் பத்திரிகையாளர் பேரவையாகும். இந்த அமைப்புதான் எம்யூஜெ-வுக்கு அலுவலகத்தை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த கட்டிடத்தை வாங்கியதன் பின்னணி சுவாரசியமானது. பத்திரிகையாளர்களின் சங்கங்களுக்கு என சொந்தக் கட்டடம் வேண்டும் என்ற எண்ணம் உதித்த காலகட்டத்தில் அதற்கு உதவ முன் வந்தவர்கள் எம் எஸ் சுப்புலட்சுமியின் கணவரான சதாசிவமும், கல்கி ஆசிரியரான கல்கி கிருஷ்ணமூர்த்தியும்.
இந்த இருவரின் முன்னெடுப்பு காரணமாக இலவசமாக இசைக் கச்சேரி நடத்திக் கொடுக்க எம் எஸ் சுப்புலட்சுமி முன்வந்தார். அத்தகைய பாட்டுக் கச்சேரியின் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டுதான் இந்த கட்டிடமே அன்றைக்கு விலைக்கு வாங்கப்பட்டது.
எம் எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 16) அவரை நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறோம். வாழ்க எம்எஸ்! வளர்க அவர் தம் புகழ்..!!
ஆர் நூருல்லா செய்தியாளன், 16-09-2024. 9655578786