நமது நிருபர், பாலாறு மீடியா
திருச்சி, செப். 18: திருச்சி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதனை பிரபலப்படுத்தும் வகையிலும் சிறப்பு நிகழ்வாக, கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என்றும், இதற்கான கட்டுரைகளை வரும் 22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெறும் 3 பேருக்கு ரூ. 18000 மதிப்பில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.
திருச்சியில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவுடன் துரிதமாகவும், நேர்மையுடன் பணியாற்றி நல்ல பெயரை எடுத்திருப்பவர் மா.பிரதீப்குமார். இவர் துறைகளை சார்ந்தும், பொதுநல நோக்கோடும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் நடத்தி வரும் புத்தகக் கண்காட்சியை திருச்சியில் சிறப்பாக நடத்த வேண்டும் என முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 6ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில், நூற்றுக்கணக்கான புத்தக அரங்குகள், சிறாா் அரங்குகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு உரைகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, பொதுநூலகத் துறை மற்றும் மாவட்ட மைய நூலக வாசகா் வட்டம் சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வண்ணம் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.
பொதுமக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் “என்னை மேம்படுத்திய வாசிப்பு” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டிக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் கட்டுரைகளை வழங்க வேண்டும்.
இதில் பங்கேற்க விரும்புவோா், தங்களது சொந்த அனுபவத்தை ‘என்னை மேம்படுத்திய வாசிப்பு‘ என்ற தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி, தங்களது ஊருக்கு அருகிலுள்ள நூலகங்களில் கட்டுரைகளை வரும் 22-ஆம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். இந்த போட்டி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் வெளியூரில் இருப்பவராக இருந்தாலும் பங்கேற்கலாம்.
இந்தக் கட்டுரைகள் சம்பந்தப்பட்ட நூலகரால், அந்தந்த தாலுக்கா மைய நூலகரிடம் ஒப்படைக்கப்படும். இதில் சிறந்த கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட மைய நூலகத்தில் ஒப்படைக்கப்படும்.
இதிலிருந்து தோ்வு செய்யப்படும் 3 சிறந்த கட்டுரைகளுக்கு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், அதாவது அக்டோபர் 6ம் தேதி முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 5,000, மூன்றாம் பரிசாக ரூ. 3,000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.