சிறப்பு செய்தி, நமது நிருபர், பாலாறு மீடியா
திருச்சி, நவ.9: திருச்சியில் உலகத் தரத்தில் ₹290 கோடியில் பிரமாண்டமான முறையில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. இதற்காக, 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மத்திய மாவட்டமாக கருதப்படும் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தமிழக முதல்வர் 110வது விதியின் கீழ், சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். நூலகம் அமைவதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியுள்ளது.
இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல் கோட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலுகம் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 8 தளங்கள் கொண்டதாக இதனை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது.
இந்த நிலையில், கட்டட வடிவமைப்பு தயார் செய்யவும், ஆலோசகர்களை தேர்வு செய்யவும் பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு, வரைபடம் பொது பணித்துறையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு கட்டுமான பணிகளுக்கான டெண்டர் கோரப்படும் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் அருகில் உள்ள 4.5 ஏக்கர் நிலத்தில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதன் பிரதான நுழைவாயில் மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் அமைக்கப்பட உள்ளது.
மொத்தம் 18,333 மீட்டர் சதுர அடி பிரதான நூலக கட்டிடம் அமைய உள்ளது. இதற்கான செலவின தொகையாக மொத்தம் ₹290 கோடி மதிப்பிடப்பட்டு அரசுக்கு ஆவணம் செய்துள்ளோம். இன்னும் ஓரிரு மாதங்களில் அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.
இந்த கட்டிடத்தை பொறுத்தவரை 18,115 மீ. சதுர அடி பரப்பளவில் வளாகம் அமையும். மீதம் உள்ளவை இரு சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மொத்தம் தரைத்தளத்துடன் சேர்த்து 8 அடுக்குமாடி தளங்கள் அமைய உள்ளது.
இதில் தமிழ், ஆங்கில புத்தங்கள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவும், அறிவியல் மையம், விளையாட்டு மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவு, ஏஐஐ (ஆர்டிபிசியல் இண்டலிஜன்ட்ஸ் பிரிவு), அறிவுசார் மையம், உள்ளிட்ட பிரிவுகள் அமைய உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் பெருமையை அறிவிக்கும் விதமாக ஒரு ஆர்ட் கேலரி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதைபோல், ஆயிரம் பேர் அமரக்கூடிய ஒரு பிரமாண்ட கூட்ட அரங்கமும் அமைய உள்ளது. இந்த வசதிகள் அனைத்தும் ஒரே கட்டிடத்திற்குள் தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்படும்.
எனவே அரசின் அனுமதி பெறப்பட்டால் அடுத்த இரண்டு மாதத்திற்குள் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு, பணிகள் தொடங்கினால் அடுத்து வரக்கூடிய 2026 சட்டமன்ற தோ்தலுக்கு முன்பு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. ஜனவரி 2026ல் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரலாம்’’என்றனர்.
இந்த நூலகம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் உலக தரத்திலான அனைத்து நூல்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள புத்தகங்களின் தொகுப்பு இங்கு கொண்டு வரப்படும். மேலும் இதில் ஒரே சமயத்தில் 800 பேர் வரை பயன்படுத்த முடியும். நவீன முறையில் புத்தகங்களை கையாளும் வசதிகள், அனைத்து புத்தங்களின் எண்ணிக்கையும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் ஏற்கனவே மாவட்ட நூலகம் 45ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என்று செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் செய்தித்தாள் பிரிவு, இரவல் பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, நூல்கள் கட்டும் பிரிவு செயல்பட்டு வருகிறது.
முதல் தளத்தில் குறிப்புதரி பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, இணை தள பிரிவு, சிறுவர் பிரிவு செயல்படுகிறது. 2வது தளத்தில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பொருட்கள் நூலகம் மற்றும் 150 பேர் அமரும் வகையிலான கூட்ட அரங்கம் அமைந்துள்ளது. தற்போது இந்த நூலகத்தில் 1.5 லட்சம் புத்தகங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஒரே சமயத்தில் 350 பேர் இந்த நூலகத்தை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.