நமது நிருபர், பாலாறு மீடியா.
சென்னை, நவ.9: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இந்தாண்டு மா.செல்வராசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கலைஞரின் பெருமுயற்சியால் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியானது 2004ம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. 2008ம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முக்கியத்துவம் கருதி கலைஞர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு தம் சொந்த நிதி ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார்.
அதன்படி, இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருது இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் அடங்கியதாகும்.
அந்தவகையில் இந்த விருது தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.
அறக்கட்டளை தொடங்கப்பட்ட பின் கடந்த 2009ம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவிற்கு 2010 ஜூன் 23 கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அப்போதைய குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் கடந்த 2022ம் ஆண்டு ஜன.22ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டன. மேலும், 2020, 2021, 2022ம் ஆண்டுகளுக்கான விருதுகளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டன. 2023ம் ஆண்டிற்குரிய விருது கடந்தாண்டு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வரால் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2024ம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் முதல்வரால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் செல்வராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இக்காலத் தமிழ் இலக்கியத்துறையில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழுலகம் நன்கறிந்த தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் மேற்பார்வையில் பல்கலைக்கழக நல்கை ஆணைய ஆய்வு ஊதியத்துடன் ‘பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்’ என்னும் பொருள் குறித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் (1970-1974) ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றுள்ளதோடு, அருஞ்சிறப்புக்குரிய இந்த ஆய்வு நூலுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை முதற்பரிசையும், முழுப் பாராட்டையும் நல்கியுள்ளது.
“இளந்தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் என நான் செல்வராசனைக் கருதுகிறேன்” என்ற கலைஞரின் பாராட்டையும் பெற்றவர். முனைவர் மா.செல்வராசன், பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர், பாரதிதாசன் கலைகள், பாரதிதாசன் ஒரு பார்வை, இலக்கியத்தில் குறுக்கும் நெடுக்கும், இலக்கியத்தில் மெல்லுரை, நல்லோர் குரல்கள், வைகறை மலர்கள், கிளறல்கள், செம்புலப்பெயல் நீர், முரசொலி முழக்கம், வண்ணச்சாரல் வாழ்த்துக்கதிர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கு இலக்கிய ஆய்வு, படைப்பு இலக்கியம் என்னும் இரண்டு வகைகளிலும் இவர் ஆற்றியுள்ள தொண்டுகள் மிகவும் சிறப்புக்குரியதாகும். ஆய்வு நெறியாளராக பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டிய சிறப்புக்குரியவர். இவர் மேற்பார்வையில் நிகழ்ந்த பல்கலைக்கழக ஆய்வுகள் 73. இவற்றுள் 54 ஆய்வுகள் பெரியார், அண்ணா, கலைஞர், பாரதிதாசன், பேராசிரியர் க.அன்பழகன் முதலான திராவிட இயக்கப் படைப்பாளர்கள், அவர்களின் படைப்புகள் பற்றியவை ஆகும்.
அத்துடன், பல்வேறு தமிழியல் ஆய்வு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் படைத்தளித்த சிறப்புக்குரியவர். இவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை. அருள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் பேராசிரியர் சுதா சேஷய்யன், இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன், பதிவாளர் புவனேஸ்வரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.