நன்றி: காவிரிமைந்தன், ஆசிரியர், விமரிசனம்.காம்.
“1924 செப்டம்பர் 20-ல்தான் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி
முதன்முதலில் லண்டனில் அறிவித்தார் தொல்லியல் ஆய்வாளர்
சர் ஜான் மார்ஷல். இந்த ஆண்டு சிந்துவெளி ஆய்வுக்கு
நூற்றாண்டு. அதற்கு ஓராண்டுக்கு முன்பு 1923ல் ‘ஒரு பண்பாட்டின் பயணம் :
சிந்து முதல் வைகை வரை’ நூல் வெளியாகியிருக்கிறது’’ –
மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ததும்பப் பேசுகிறார்
ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள உறவு
குறித்த இவரது ‘Journey of a Civilization: Indus to
Vaigai’ நூல் 2019-ல் வெளியானபோது பல தாக்கங்களை
ஏற்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது
வெளியாகியிருக்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு,
பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
35 ஆண்டுக்கால இந்திய ஆட்சிப்பணியில் இந்தியாவின்
பல மாநிலங்களில் பணியாற்றிய ஆர்.பாலகிருஷ்ணன், அங்கு
பல ஊர்களின் பெயர்களும் மனிதர்களின் பெயரும் தமிழ்ப்
பெயர்களாகவும் தமிழ்ப்பெயர்களை ஒத்த பெயர்களாகவும் இருப்பதை
அறிந்து வியந்தார்.
சங்க இலக்கியத்தில் காணப்படும் சிந்துசமவெளி
குறித்த தடயங்களையும் அதனுடன் இணைத்துப்பார்த்தார்.
அகழ்வாய்வு, மொழியியல், பெயராய்வு, இலக்கியச்சான்றுகள்,
கல்வெட்டுகள், சமூக மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில்
இவரது ஆய்வுகள் அமைந்திருப்பதால், நூல் வெளியீட்டுவிழா
மேடையில் மானுடவியல் ஆய்வாளர் பக்தவச்சல பாரதி
‘இது ஆய்வுமுறைகளினூடாக – ஆய்வுமுறைகளைக் கடந்த ஆய்வு’
(Trans-disciplinary research) என்று குறிப்பிட்டுப்
பாராட்டினார். ‘‘இதுவரை திராவிட இயக்கத்தினர் சங்க இலக்கியம்
பற்றிப் பேசும்போதெல்லாம் ‘அது இலக்கியம்தானே, வரலாறு
இல்லையே’ என்று பலர் சொன்னார்கள்.
இப்போது அது வரலாறு என்று நிறுவ ஒரு நூல் கிடைத்திருக்கிறது.
சொல்லியலாக இருந்த சங்க இலக்கியத்தைத் தொல்லியல் சான்றாக
மாற்றியமைத்திருக்கிறார் பாலகிருஷ்ணன் …
பாலகிருஷ்ணன் சொல்கிறார் –
சிந்துசமவெளி நாகரிகம் திராவிடப் பண்பாடு என்பது புதிய
விஷயமில்லை. சிந்து சமவெளி நாகரிகம் பற்றி முதன்முதலில்
சர் ஜான் மார்ஷல் அறிவித்த அதே 1924-ம் ஆண்டு டிசம்பரில்
‘மாடர்ன் ரிவ்யூ’ இதழில் சுனிதி குமார் சட்டர்ஜி என்ற ஆய்வாளர்
‘திராவிடர்களின் தோற்றமும் இந்தியப் பண்பாட்டின் தொடக்கமும்’
என்னும் கட்டுரையை எழுதினார்.
‘சிந்து சமவெளி நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது,
ஆரியர் அல்லாதது; திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது’ என்று
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டார்.
அஸ்கோ பர்போலா போன்ற வெளிநாட்டு அறிஞர்களும் ஐராவதம்
மகாதேவன் போன்றோரும் திராவிடக் கருதுகோளை
முன்வைத்திருக்கிறார்கள்.
இந்திய வரலாற்றில் இரண்டு முக்கியமான புதிர் முடிச்சுகள்
உள்ளன. சிந்து சமவெளி மக்கள் யார், அவர்களின் மொழி என்ன,
அவர்கள் எங்கு போனார்கள் என்பது ஒரு புதிர் முடிச்சு.
அதேபோல் திராவிட மொழிகளின் தோற்றம் என்பது
இன்னொரு புதிர் முடிச்சு. இரண்டு புதிர்
முடிச்சுகளுக்கான விடைகளைத் தேடும் முயற்சிதான் என் ஆய்வு.
‘சிந்துசமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட
இடமும் ஒன்றே’ என்பதை என் ஆய்வுகள் மூலம்
முன்வைத்திருக்கிறேன்.
திராவிடக் கருதுகோள் முன்வைக்கப்பட்ட காலங்களிலேயே
சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ ஆரிய நாகரிகம், வேதப்பண்பாடு
என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழுக்கும்
சிந்துவெளிக்குமான தொடர்புதான் அதிகம் என்பதற்கான விரிவான
தரவுகளைத் திரட்டி நூலாக்கியிருக்கிறேன்.
இந்த நூல் இந்தியாவின் பன்மியத்தைக் கொண்டாடுகிறது.
எந்த இனத்தையும் வெளித்தள்ளவில்லை. வெறுப்புணர்வு இல்லாத
பொறுப்புணர்வுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை.
அதனால்தான் இந்த நிகழ்ச்சியிலேயே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற வாக்கியத்தை ஒடிசாவைச் சேர்ந்த மணல்சிற்பக் கலைஞர்
சுதர்சன் பட்நாயக் உருவாக்கியிருந்தார்.
சிந்து சமவெளியில் கிடைத்த குடித்தலைவர் சிலை, கீழடிப் பானை
உருவத்தை ஒடிசாவைச் சேர்ந்த சிற்பக்கலைஞர் அசோக்
மகாராணாவைக் கொண்டு உருவாக்கி
முதல்வர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகளாக
வழங்கினோம்.
‘‘தமிழர்களுக்குத் தொன்மையான வரலாறு இருக்கிறது என்பதை
ஏற்றுக்கொள்ளும் சிலரே ‘உங்கள் ஆய்வுகள் தமிழர்களை
வெளியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாகக் காட்டுவது தவறு’
என்று கூறுகிறார்களே…..?’’ என்கிற கேள்விக்கு –
‘‘வரலாற்று ஆய்வு என்பது உறுதி செய்யப்பட்ட தரவுகளை
அடிப்படையாகக் கொண்டதே தவிர, நம் அரசியல் விருப்பங்களைச்
சார்ந்தது அல்ல.
சிந்துசமவெளியில் நிலவியது வேதகாலப் பண்பாடு என்று ஒருசாரார்
கூறிவந்தனர். அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஆனால்
அது திராவிடப் பண்பாடு என்பதற்கும், தமிழுக்கும் அந்தப்
பண்பாட்டுக்கும் பிணைப்பு இருக்கிறது என்பதற்கும் சங்க
இலக்கியமே சாட்சி.
வடமொழி இலக்கியங்களில் தென்னிந்தியா பற்றிய விரிவான,
தெளிவான சித்திரிப்புகள் இல்லை. ஆனால் நம் பழந்தமிழ்
இலக்கியங்களில் வட இந்தியா பற்றிய வியப்பூட்டும் சித்திரிப்புகள்
உள்ளன.
பனிமலைகள், பாலைவனங்கள், ஒட்டகம் போன்றவை சங்க
இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. ஆண் ஒட்டகம், பெண் ஒட்டகம்,
ஒட்டகக் குட்டியை எப்படி அழைப்பது என்று இலக்கணம் சொல்கிறது
தொல்காப்பியம். ஒட்டகம் சுமை தூக்கப் பயன்படுத்தப்பட்டதையும்
அப்படி சுமை தூக்கிச் செல்லும்போது அந்த ஒட்டகம் எலும்பைத் தின்று
பசி ஆறியதையும் சங்க இலக்கியம் பாடுகிறது.
ஒட்டகமே இல்லாத தமிழ்நிலத்தில் இது எப்படி சாத்தியம்?
வடக்குநிலப்பகுதிகள் குறித்த சித்திரிப்புகள் தமிழ் இலக்கியத்தில்
எப்படி வந்தன?
சங்க இலக்கியம் என்பது அப்போதைய சமகால இலக்கியப்பதிவுகள்
மட்டும் அல்ல. பழங்கால புலப்பெயர்வுகள் பற்றிய மீள்நினைவுகளை
உள்ளடக்கிய வாய்மொழி மரபுகளின் ஆவணப்பதிவும் ஆகும்.
அதனால் அதை நான் பல்லடுக்கு இலக்கியம் என்கிறேன். இதற்கான
விரிவான ஆதாரங்களை நான் இந்த நூலில் முன்வைத்திருக்கிறேன்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் செம்பு, வெண்கல உலோகக்
கலவைகள் பற்றிய தடயங்கள், உலோகக் கைவினைச் சிற்பங்கள்,
கீழடி போன்ற இடங்களில் கிடைக்கும் சிந்துவெளிக் குறியீடுகள்
போன்ற பானைக் கீறல்கள் ஆகியவை இந்த முடிவுகளுக்கு
வலுச்சேர்க்கின்றன. இதுவரை இந்தியாவில் நிலவிய
நகர்மயப்பண்பாடுகளிலேயே பழைமையான பண்பாடு
சிந்துவெளி நாகரிகம்தான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நாளையே அதைவிடப் பழைமையான நகரத்தைத் திருநெல்வேலியிலோ
மதுரையிலோ கண்டுபிடித்தால் நம் ஆய்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யலாம்.
ஆனால் இப்போதைய தரவுகளின் அடிப்படையில் சங்க இலக்கியம்
படைத்த மக்களின் மூதாதையர்கள் அதற்கும் முந்தைய காலகட்டத்தில்
இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்;
அதன் மீள்நினைவுகள் சங்க இலக்கியங்களில் ஆவண வடிவம்
பெற்றுள்ளன என்பதை நான் முன்வைக்கிறேன்.
அதற்காக இந்தியாவின் பிற பகுதிகள், குறிப்பாக தென்இந்தியா
யாருமற்ற வெற்றிடம் என்பது பொருள் அல்ல. தென்னிந்தியப்
பகுதிகளில் பழங்கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
புதிய கற்கால வாழ்வியல் சான்றுகள் உள்ளன.
ஆனால் நாம் இப்போது ஆய்வுக்கு உட்படுத்துவது
பண்பட்ட நகர்மயப்பண்பாடு; வெளிநாட்டு வணிகத்தை
உள்ளடக்கிய வாழ்வியல் ஆகியவற்றின் தோற்றம்
தொடர்ச்சி பற்றித்தான். நிலைத்த வேளாண்மை, உபரி உற்பத்தி,
பண்டங்களுக்கு மதிப்புக்கூட்டும் கைவினைநுட்பம்,
வெளிநாட்டு வணிகத்தொடர்பு ஆகியவை இன்றி இது சாத்தியம் இல்லை.
மேலும், புலம்பெயர்வு என்பதையே இழிவாகப் பார்க்க
வேண்டியதில்லை. மனித வரலாறு பயணங்களால்
கட்டமைக்கப்பட்டது. குத்தவைத்து உட்கார்ந்து குளிர்காய்ந்தவன்
இன்னும் குகையில்தான் நிற்கிறான்.
நகர்ந்து வந்தவர்களே நாகரிகம் படைத்தார்கள்.
பயணத்தின் திசையைவிடப் பயணம் முக்கியம்.
பயணத்தைவிடப் பயணி முக்கியம்.
பயணத்தால் பட்டை தீட்டப்பட்ட ஒரு பண்பாட்டில்தான்
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘எத்திசை செல்லினும்
அத்திசை சோறே’, ‘பெரிதே உலகம் பேணுநர் பலரே’ போன்ற
கருத்தாக்கங்கள் வெளிப்படும்.
வடவேங்கடம் முதல் தென்குமரி வரை என்று சங்க இலக்கியம்
சொல்லும் அரசியல் நிலப்பரப்பும் சங்க இலக்கிய மீள்நினைவில்
உள்ள நிலப்பரப்பும் ஒன்று கிடையாது.
நான் உறுதியாகச் சொல்கிறேன்.
தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல;
மாவட்டத்தின் மொழியல்ல,
அது ஒரு நாகரிகத்தின் மொழி.
நம் சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்தின்
நாடு தழுவிய இலக்கியம்.’’
‘‘மண்பாண்டங்கள் பற்றிய ஆய்வுகள் மட்டுமே தொல்லியல்
ஆய்வு கிடையாது என்று சில எதிர்க்குரல்கள் கேட்கின்றனவே…?’’
‘‘பானையை வைத்துத்தான் வரலாற்று ஆய்வைச் செய்ய முடியும்.
செங்கற்களால் கட்டப்பட்ட நாகரிகம் சிந்து சமவெளி. அங்கு சுட்ட
செங்கல்கள் மில்லியன் கணக்கில் இருக்கின்றன. செங்கல்
செய்பவர்களும் பானை வனைபவர்களும்தானே
இந்த நாகரிகத்தின் அடிப்படைகள். அவர்களை விட்டுவிட்டு
எப்படி வரலாற்றாய்வு செய்ய முடியும்?
பானைகளின் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்தவர்கள்
வரலாற்றாய்வாளர்கள். இந்தியத் தொல்லியல் கழகத்தின்
தலைவராக இருந்த பி.பி.லால் 1969-ல் பாட்னாவில் நடைபெற்ற
இந்திய மட்பாண்டங்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கத்தில் பேசிய
ஒரு உரையே உதாரணம்.
‘பழந்தமிழ் இலக்கியங்கள் ரோமிலிருந்து இந்தியாவுக்கு ஒயின்
இறக்குமதி செய்யப்பட்டதைத் தெரிவிக்கின்றன. இலக்கியத்தில்
கூறப்படும் இந்தத் தகவலை வரலாறாக உறுதிசெய்ய முடியுமா…?
அரிக்கமேட்டில் கனமான இரு கைப்பிடிகளுடன் கூடிய கூம்பு வடிவ
மது ஜாடிகள் கிடைத்துள்ளன. இந்த ஜாடிகளின் உட்புறத்தில்
ஒட்டியிருந்த உதிர் துகள்களை வேதியியல் பரிசோதனை செய்தபோது
அவற்றில் ஒயினின் எச்சமான பிசின் போன்ற பொருள்கள்
காணப்பட்டன’ என்றார். எனவே வரலாற்று ஆய்வுகளில்
பாண்டங்களைப் புறக்கணித்துவிட முடியாது.
மட்பாண்டங்கள் செய்பவர்களைக் கலம் செய் கோ, முதுவாய் குயவ,
வேட்கோ என்று கொண்டாடிய தமிழ் மரபிலிருந்து
வரலாற்றைப் பார்ப்பவர்களுக்கும் பானை செய்யும் குயவர்களை சாதிய அடுக்கில் இழிவாகப் பார்ப்பவர்களுக்கும் வித்தியாசமிருக்கிறது.
தமிழ் மரபில் பானைகளைச் செய்யும் குயவர்கள்தான் நகரத்தின்
விழாக்களை அறிவிக்கிறவர்கள்; பலிக்கல்லுக்குப் படையலிட்டு
சாமியாடி வருபவர்கள். மதுரை மாவட்டத்தில் இன்றளவும்
பூசாரிகளாக இருப்பவர்கள் குயவர்கள். கீழடி அருங்காட்சியகத்தில்
ஒரு கட்டடத்துக்குப் பெயரே ‘கலம் செய் கோ’ என்று
சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ரிக் வேதத்தின் புருஷ சூக்தமோ
பாண்டங்கள் செய்பவர்களை சூத்திரர்கள் என்று வரையறுக்கிறது.
அந்த மரபின் தொடர்ச்சியாகத் தங்களைக் கருதுபவர்கள்
‘மண்பானைகளை ஆய்வு செய்வதெல்லாம் ஓர் ஆய்வா?’
என்று கேட்கத்தானே செய்வார்கள்.’’
‘‘முக்கியமான ஆய்வுகளை முன்வைத்திருக்கிறீர்கள். இதன்
அடுத்தகட்ட நகர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்று
கருதுகிறீர்கள்……?’’
‘‘நான் முன்பு சொன்னதைப்போல் வரலாற்றின் இரண்டு
புதிர் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் இருப்பதற்கான காரணங்களில்
ஒன்று தமிழ்நாட்டில் போதுமான அகழாய்வுகள் நடைபெறாமல்
இருந்தது. இப்போது முழுவீச்சில் கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர்
என்று அகழாய்வுகள் நடக்கின்றன. இந்த ஆய்வுகளில் கிடைக்கும்
பல அம்சங்கள் நமக்கு சிந்துசமவெளியை நினைவுபடுத்துகின்றன.
இந்த ஆய்வுகள் மேலும் மேலும் தீவிரத்துடன் நடத்தப்பட வேண்டும்.
இன்றைய தேதியில் சிந்துவெளி, ஹரப்பா நகர்மயப் பண்பாட்டின்
தெற்கு எல்லை மகாராஷ்டிராவின் தைமாபாத்தில் முடங்கிக்
கிடக்கிறது. தைமாபாத்துக்கும் கீழடிக்கும் இடையே அகழாய்வு
செய்யப்பட வேண்டிய எத்தனையோ தொல்லியல் நகரங்கள்
இருக்கின்றன. எதிர்கால அகழ்வாராய்ச்சிகள் இந்த எல்லையை
மேலும் தெற்கு நோக்கி நகர்த்தக்கூடும். அதன்மூலம் நமக்குக்
கிடைக்கும் தரவுகள் வரலாற்றின் புதிர்முடிச்சுகளை அவிழ்க்கக்கூடும்.
வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி’’ ——-என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.