சிறப்புக் கட்டுரை: ஆக்கம்- கிள்ளிவளவன், எழுதுக இயக்கம், காஞ்சிபுரம்
எழுதுக ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் சந்திப்பு 01.02.2025 சனிக்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
தற்போது எழுதுக அமைப்பு மூலம் புத்தகங்கள் எழுதியுள்ள இளம் படைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதேவேளை இவர்கள் புத்தகங்கள் எழுத காரணமாக இருந்தது மாணவர்கள் என்பதுதான் சிறப்புக்குரிய ஒன்று.
இம்மாணவர்கள் ஒவ்வொருவரின் பணிகளும் பண்புகளும்
பாராட்டத்தக்கது மட்டுமல்ல வியக்கத்தக்கதும் ஆகும்.
ஏனென்றால் புத்தக வாசிப்பு அரிதாகி வரும் இவ்வேளையில் அப்படிப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்துவதும் அவர்களை புத்தகம் எழுத உற்சாகப்படுத்தி வழி நடத்துவதும் எளிதான காரியமல்ல.
வழிகாட்டி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து அவர்களோடு மாணவர்களை இணைப்பதும் பல்வேறு பணிச் சூழல் இருந்தாலும் தேர்வு வேளை, நேரம் போதவில்லை, எழுத முடியவில்லை என்று மாணவர்கள் துவண்டு போனாலும் அவர்களை ஊக்கப்படுத்தி எழுத வைத்தது இந்த ஒருங்கிணைப்பாளர்களே.
ஒரு ஆசிரியரிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள் இவர்களிடம் நிறைந்துள்ளன. வயதில் மூத்தவர்களையும் தாய்மையோடு அணுகும் பக்குவம் இவர்களிடம் மிளிர்ந்துள்ளது. அந்த வகையில்,
“மாணவி பிருந்தா”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் விவசாயம் பயின்று வருகிறார். எழுதுக இரண்டாம் அணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு பலரும் புத்தகம் எழுத நம்பிக்கை அளித்தவர். அப்பொழுது இவர் பள்ளி மாணவியாக இருந்த போதும் பல வழிகாட்டி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து திறம்பட வழி நடத்தியவர்.
தொடர்ந்து எழுதுக மூன்றாம் அணியில் ஒருங்கிணைப்பு குழுவில் சிறப்பாக செயல்பட்டு பல மாணவர்களின் எண்ணங்களையும் எழுத்துகளையும் சீர்படுத்தி அவர்கள் எழுத்தாளராக உயர தன்னை அர்ப்பணித்தவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை உடல் நலம் குன்றி இறந்து விட இவரது தாய் தினசரி கூலி வேலைக்கு சென்று இவரையும் இவரது தங்கையையும் காப்பாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் இம்முறை ‘கற்கை’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
“மாணவி மீனலோசினி”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் பொருளாதாரம் படித்து வருகிறார். எழுதுக இரண்டாம் அணியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு பல இளம் படைப்பாளர்களையும் வழிகாட்டி ஆசிரியர்களை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தவர்.
தொடர்ந்து எழுதுக மூன்றாம் அணியில் ஒருங்கிணைப்பு குழுவில் சிறப்பாக செயல்பட்டு பல மாணவர்களின் எண்ணங்களை எழுத்தாக்கம் செய்தவர்.
மாணவி மீனலோசினி தனது தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களால் உந்தப்பட்டு பல நல்ல பண்புகளை தன்னகத்தே வளர்த்துக் கொண்டவர் என்பதோடு அந்த ஆசிரியர்களை தனக்கு முன்மாதிரியாகவும் கொண்டவர். மேலும் இம்முறை இவர் ‘விண்ணின் மதி’ என்ற கவிதைப் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
“மாணவி சுகன்யா”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் தமிழ் படித்து வருகிறார்.
எழுதுக இரண்டாம் அணியில் ஒரு புத்தகம் எழுதியவர் தனது சிறந்த நேர மேலாண்மையால் எழுதுக மூன்றாம் அணியில் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு புத்தகம் எழுதும் போது தனக்கு ஏற்பட்ட சவால்களை இந்தாண்டு புத்தகம் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக மாற்றியவர்.
சுகன்யாவின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒன்றில் இறந்து விட தனது தங்கை மற்றும் தம்பியை பொறுப்போடு கவனித்துக்கொள்ளும் வீட்டின் மூத்த மகளாவார். கல்லூரி, படிப்பு, சமையல், வீட்டு வேலைகள் என அனைத்தும் ரெடி. அதோடு எழுதுக ஒருங்கிணைப்பு பணிகள்! விரைவாக செயல்பட்டு புத்தகம் எழுதிய மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களை சிறப்பாக ஒருங்கிணைத்தவர். ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர்ப்போடு மாற்றி ‘எனக்கு நேரமே கிடைக்கவில்லை’ என்று பெருமை பேசுபவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் சுகன்யா.
மேலும் அம்மாவிடம் தான் கற்றதையும் வளர் இளம் பருவத்தினருக்கு இருக்க வேண்டிய பக்குவத்தையும் பேசும் ‘அம்மாவின் நிழல்’ என்ற புத்தகத்தையும் இம்முறை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மாணவி சூரிய பிரபா”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து தற்போது சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
எழுதுக இரண்டாம் அணியில் ஒரு புத்தகம் எழுதியவர் தனது பொறுமை மற்றும் கடின உழைப்பால் எழுதுக மூன்றாம் அணியில் ஒருங்கிணைப்பாளராக உயர்ந்துள்ளார்.
மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் பாலமாக விளங்கி பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர்.
தெளிந்த சிந்தனை, தரமான எழுத்து என தனி முத்திரை பதிப்பவர் இவர். 12ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம், கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் மாநில அளவில் முதலிடம், தனது தகுதியினால் அரசு சட்டக் கல்லூரியில் படிக்க இடம் என கடின உழைப்பினால் இலக்குகளை எட்டி வருபவர்.
மேலும் இம்முறை தனது பள்ளிப் பருவத்தில் சந்தித்த அனுபவங்களிலிருந்துஇருளர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரின் கல்விக் கனவை பேசும் ‘பட்டுசாமியும் பள்ளிக்கூடமும்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் சூரிய பிரபா.
“மாணவி லோகஸ்ரீ”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தவர் தற்போது கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடித்துள்ளார்.
எழுதுக முதல் மற்றும் இரண்டாம் அணி மாணவர்கள் புத்தகங்கள் எழுத திரைக்குப் பின்னால் இவரது தீவிர உழைப்பு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.
லோகஸ்ரீ ஒவ்வொரு அணியிலும் ஒரு புத்தகத்தை எழுதியிருக்க முடியும். ஆனால் அப்படி இவர் புத்தகம் எழுதாமல் பிற மாணவர்கள் புத்தகம் எழுத அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். எழுதுக முதல் அணி, இரண்டாம் அணி மற்றும் மூன்றாம் அணி என மூன்று அணிகளிலும் ஒருங்கிணைப்பாளராக செயல்படுபவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
புத்தகம் எழுதும் மாணவர்கள் சோர்வடைந்த போதும் வழிகாட்டி ஆசிரியர்கள் முடியவில்லை என்ற போதும் அந்த இடைவெளியை தனது திறமையால் நிரப்பியவர்.
ஆழ்ந்த சிந்தனை, தெளிவான பேச்சுக்கு அடையாளமான லோகஸ்ரீ நெசவாளியின் மகளாவார். தாய்- தந்தை இருவரும் காலம் காலமாக நெசவாளர்கள். இப்படி காஞ்சிபுரம் பகுதிகளில் நெசவாளர்கள் சந்தித்த அனுபவங்களையும் சவால்களையும் அழகுற எடுத்துரைத்து காஞ்சிபுரம் பட்டுக்கு புதிய அர்த்தத்தைத் தரும் ‘நூலில் சிக்கிய நெசவு’ என்ற புத்தகத்தை இம்முறை எழுதியுள்ளார்.
“மாணவி சுஜி”
அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார்.
எழுதுக இரண்டாம் அணியில் ஒரு புத்தகம் எழுதியவர் தற்போது தனது குடும்ப வறுமையின் காரணமாக படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஒரு கடையில் வேலை பார்த்தும் வருகிறார்.
இவரது பெற்றோரும் நெசவாளர்கள் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன்பு கடன் சுமை காரணமாக விற்கப்பட்டது இவரது வீடு. இப்போது அதே வீட்டில் இவர்கள் வாடகைக்கு தங்கி உள்ளனர் என்பது நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஒரு தரமான சான்று எனலாம்.
மேலும் காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் எழுதுக அரங்கு ஒருங்கிணைப்பு, எழுதுக மூன்றாம் அணியில் மாணவர்கள் ஒருங்கிணைப்பு என சுஜி அவர்களின் பணிகள் ஆத்மார்த்தமானது.
எனது பார்வையில்….
புத்தகம் எழுதுவது சுலபம். எழுத வைப்பது கடினம். அந்த கடினமான பணிகளை மிகுந்த சகிப்புத் தன்மையோடு செய்தவர்கள் இம்மாணவர்கள். இவர்கள் குடிசையில் இருந்தாலும் பிறர் புகழ் பெற, பிறர் உயர ஓயாமல் உழைத்தவர்கள். இம்மாணவர்கள் எதையும் எதிர்பாராமல் செய்பவர்கள்; செய்து முடித்த பிறகும் அந்த வெறுமையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் படைத்தவர்கள்; தனது செயல்களினால் மற்ற மாணவர்கள் அடைந்த பெருமையை, ஆனந்தத்தை, பூரிப்பைக் கண்டு மனம் மகிழ்ந்தவர்கள்! உண்மையில் இதற்குப் பொருள்தான் அர்ப்பணிப்பு…
இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது மாணவ ஒருங்கிணைப்பாளர்களுடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் அமைந்திருந்தது. இவர்கள் அனைவரும் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்பதால் இவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோரை சந்தித்துப் பேசினோம். அப்போது இவர்களின் பெற்றோர்,
1. ஒரு மேக்கப் செட்டு கூட இது கிட்ட இல்லை. எதுவும் கேக்கவே மாட்டேங்குது.
2. நல்லா படிக்கிது. இதுதான் வேலைக்கு போய் குடும்பத்த காப்பாத்தும்னு நெனைக்கிறேன்.
3. மொதல்ல எப்ப பார்த்தாலும் போன் பேசிக்கின்னே இருக்கும். ஒரு நாள் ஒக்காந்து கேட்டுக்குன்னு இர்ந்தேன். எம்மாம்பேரு பேசறாங்க. படிக்கிற பசங்களுக்கும் டீச்சருக்குலாம் கூட இது புத்திமதி சொல்லுது. அன்னிலேர்ந்து நான் எதுவும் சொல்றதே இல்ல. இதுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரிது.
4. இப்ப எந்த பயமும் எங்களுக்கு இல்ல.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று எப்போதோ படித்தது அப்போது நமக்கு நினைவுக்கு வந்தது.
-கிள்ளிவளவன், எழுதுக இயக்கம், காஞ்சிபுரம்.