விருதுநகர், செப். 28: கீழடி நாகரிகம் உருவாவதற்கு முன்பாக சாத்தூர் வைப்பாற்று நாகரிகம் உருவாகி உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட புத்தக திருவிழா செப்டம்பர் 27-ம் தேதி துவங்கியது. விழாவை துவக்கி வைத்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் இத்தகவலை கூறினார்.
சென்னை மாநகரில் மட்டும் நடந்து கொண்டிருந்த புத்தக திருவிழாவை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கொண்டு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது துவங்கினோம். தற்போது புத்தக திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் படைப்பாளிகளுக்கு தற்போது பெரும் மரியாதை கிடைத்து வருகிறது. கி.ரா மறைவின்போது முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எழுத்தாளர்களை கெளரவிக்கும் திட்டங்கள் மூலம் எழுத்தாளர்கள் மீது ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.
வேறு எங்கும் கிடைக்காத செல்வத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. மேற்கு திசையில் வான்உயரம் உயர்ந்து நிற்கும் மேற்குத்தொடர்ச்சி மலையை காணமுடியும். இந்தியாவில் இமயமலைக்கு முன்பாக உருவாகி உள்ள மலைத்தொடரான மேற்குதொடர்ச்சி மலையை நாம் பெற்றுள்ளோம்.
எங்கும் இல்லாத உயிரினங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ளன. வெம்பக்கோட்டை அகழாய்வு நிலப்பரப்பு எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இருக்கலாம். கீழடி நாகரிகம் உருவாவதற்கு முன்பாக சாத்தூர் வைப்பாற்று நாகரிகம் உருவாகி உள்ளது. சிந்தனை மரபு கீழ்திசை நாடுகளில் இருந்து உருவாகியது. உலகம் முழுவதும் நாம் இலக்கியம், எழுத்து முறைகளை தந்துள்ளோம். புத்தகங்கள் கையில் இருக்க கூடிய அறிவு சுரங்கங்கள் என்றார் தங்கம் தென்னரசு.
