நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.
சென்னை, பிப்ரவரி 1: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பு புலனாய்வு காவல்துறையின் (SIT) அராஜக நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நேற்று (01.02.2025) மாலை 4 மணியளவில், மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், பாலியல் பலாத்கார வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இச் சம்பவத்தில் அம்மாணவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார், பாலியல் வன்கொடுமை புரிந்த அந்த ஞானசேகரன் எனும் கயவனை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் அதேநேரத்தில் வழக்குப் பதிவு செய்த எப்ஐஆர் நகல், வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பாதிப்புக்குள்ளான மாணவியின் விவரம் அனைவருக்கும் தெரியவந்தது. இது விதிமீறல் நடவடிக்கையாகும். பாதிப்புக்குள்ளாவர் பெண் என்பதால் அதனை வெளியிடக் கூடாது என்பது சட்டம்.
ஆனால் இந்த முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதனிடையே செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய முதல் தகவல் அறிக்கையை பதிவிறக்கம் செய்த பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை வலைவீசியது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தது.
இதனை கண்டித்து பிரஸ் கிளப் சார்பில் அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பெருந்திரளான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும், சட்ட விதிமீறலை கண்டித்தும் கண்டன குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.