சென்னை, அக். 10: முரசொலி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82), உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (2024 அக்டோபர் 10) காலமானார். முரசொலி செல்வத்தின் உடல் பிற்பகலில் சென்னை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியும், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (82), பெங்களூரில் வசித்து வந்தார். முரசொலி செல்வம் வயது முதிர்வு, முதுமை காரணமாக பெங்களூருவில் உள்ள சதாசிதவம் நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். இன்று காலை அவர் வழக்கம் போல் முரசொலி நாளிதழுக்காக குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் ஓய்வு எடுப்பதற்காக சென்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூர் எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
அவரது மறைவை கேட்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மறைந்த முரசொலி செல்வம் திமுகவின் நாளிதழான முரசொலியின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளார். முரசொலியில் சிலந்தி எனும் பெயரில் நகைச்சுவையாகவும், புள்ளிவிவரத்துடனும் எழுதி வந்தவர். பல்வேறு தமிழ் திரைப்படங்களையும் தயாரித்தவர் முரசொலி செல்வம்.
அதிமுக ஆட்சியில் உரிமை மீறல் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூண்டில் ஏறி நின்று துணிச்சலாக தனது வாதங்களை முன் வைத்தவர் முரசொலி செல்வம். மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கட்சித்தொண்டர்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது.
முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றம், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர் என பலமுகங்கள் கொண்ட முரசொலி செல்வம் மறைவுக்கு பாலாறு பதிப்பகம், தமிழ்நண்பன் பதிப்பகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
