நமது நிருபர், பாலாறு நியூஸ் மீடியா
சென்னை, ஜனவரி 31: காஞ்சிபுரம் மாவட்ட புத்தகத் திருவிழா இன்று (ஜனவரி 31-ம் தேதி) தொடங்கி பிப்ரவரி 10ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகின்றன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் என அழைக்கப்படும் பபாசி உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு அரசு, புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில், மாவட்ட ஆட்சியர் ஏற்பாட்டில் 3ம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.
புத்தகத் திருவிழா மூலம் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. புதிய புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. வெளியீட்டு விழாக்களும் நடத்தப்படுகின்றன. இது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அறிவுடைய சமுதாயம் உருவாகவும் வழிவகை செய்கிறது.
தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா, காஞ்சிபுரம் மக்களிடையே மிக்க கவனத்தை ஈர்த்துள்ளது. கோயில் நகரமான காஞ்சியில், மாலை வேளையில் கோயிலுக்கு செல்வதை போல, பொதுமக்களும், மாலையில் தினமும் புத்தகக் காட்சிக்கு வந்திருந்து புத்தகங்களை பார்வையிடுகின்றனர்.
குறிப்பாக, பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் புத்தகக் காட்சிக்கு வருவதையும், காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலம் கண்காட்சிக்கு திரண்டு வருவதையும் காண முடிகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா குறித்த அறிவிப்பு முன்னரே வெளியாகி பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் புத்தகத் திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா-2025 மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்குகிறது. இதில் 90 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பிரபல எழுத்தாளர்கள் தொடங்கி, உள்ளூர் படைப்பாளிகளின் எழுத்துகள் அடங்கிய புத்தகங்கள் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நாள்தோறும் மாலை வேளையில் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரைகள், சிந்தனையை தூண்டும் பேச்சாளர்களின் கருத்துரைகள், பட்டிமன்றங்கள், மாணவ, மாணவிகள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
புத்தகக் காட்சியில் புத்தகம் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சதவீத கழிவு விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் இல்லை. கண்காட்சியில் பங்குபெறும் வாசகர்களுக்கு, குலுக்கல் முறையில் தினமும் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.