சிறப்புச் செய்தி. நமது நிருபர், பாலாறு மீடியா
மனிதர்கள் மத்தியில் பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குவது நாம் அடிக்கடி பார்க்கும் ஒன்று. ஆனால் பழிவாங்கும் பறவைகள் அல்லது விலங்குகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மனிதர்கள் மத்தியில் பழிவாங்கும் எண்ணம் தலைதூக்குவது நாம் அடிக்கடி பார்க்கும் ஒன்று. ஆனால் பழிவாங்கும் பறவைகள் அல்லது விலங்குகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாங்க அதுபற்றி தெரிஞ்சிக்கலாம்.
பல நூற்றாண்டுகளாகவே பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அதேபோல் பல வருடங்கள் கடந்தாலும் யானைகள் மனிதர்களின் முகங்களை மறப்பதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் காகங்கள் கூட கோபமாக இருக்கும். பழிவாங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.
ஆம், காகங்கள் கூட மனிதர்களை போல வெறுப்புணர்வை கொண்டுள்ளதாக பறவை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆய்வு ஒன்றின்படி காகங்கள் மனிதர்களுடன் பகையை வளர்த்துக் கொண்டால், அவை சுமார் 17 ஆண்டுகள் வரை நினைவில் வைத்திருக்கும் மற்றும் குறிப்பிட்ட நபரை பழிவாங்க முயற்சி செய்யலாம் என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில் காகங்கள் குறித்த இந்த சுவாரசிய விஷயங்கள் தெரியவந்துள்ளன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பேராசிரியர் ஜான் மார்ஸ்லஃப் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காகங்கள் பழிவாங்குகின்றனவா என்பதை சோதிக்க கடந்த 2006-ஆம் ஆண்டில் பரிசோதனையில் ஈடுபட்டார். சோதனையின்போது, பேய் போன்று முகமூடி அணிந்து கொண்டு காகங்களுக்காக வலை விரித்திருந்தனர். அதில் 7 காகங்களை பிடித்தனர்.
இதையடுத்து, வலையில் சிக்கிய 7 காகங்களின் இறக்கைகளிலும் அடையாளம் குறிக்கப்பட்டு பின்னர் அவற்றை காயமின்றி விடுவித்தார் ஜான் மார்ஸ்லஃப். இருப்பினும் காகங்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட அவரைப் பின்தொடர்ந்தன. ஒவ்வொரு முறையும் அவர் குறிப்பிட்ட அந்த பேய் முகமூடி அணிந்த போதெல்லாம் அடையாளம் குறிக்கப்பட்ட காகங்கள் அவரை தாக்கின. மேலும் ஆச்சரியப்படும் விதமாக வலையில் பிடிபட்ட காகங்கள் தவிர மற்ற காகங்களும் தாக்குதலுக்காக சேர்ந்தன. இந்த ஆக்ரோஷ தாக்குதல்கள் சுமார் 7 ஆண்டுகள் வரை வீரியம் குறையாமல் நீடித்த நிலையில், 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு, காக்கைகளின் தாக்குதல் படிப்படியாக குறைய தொடங்கியது.
பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் அதாவது சோதனை துவங்கி சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ஸ்லஃப் அதேபோன்ற மாஸ்க் அணிந்து வெளியே நடந்து சென்றபோது முதல் முறையாக, காகங்கள் அவரைத் தாக்கவே இல்லை.
இதனைத்தொடர்ந்து பேராசிரியர் மார்ஸ்லஃப் தனக்கு நிகழ்ந்த இந்த அனுபவத்தை ஆராய்ச்சி முடிவாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.
மார்ஸ்லஃப் தனது இந்த ஆய்வின் மூலம், பாலூட்டிகளில் உள்ள amygdala-வை போன்ற மூளைப் பகுதியைக் காகங்களும் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். இது உணர்ச்சிகளைச் செயலாக்குவதற்கு பொறுப்பான மூளையின் ஒரு பகுதியாகும். இதனால் காகங்கள் மனித நடத்தையை உன்னிப்பாக கவனிப்பது மட்டுமின்றி நம் முகத்தை கூட எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே ஆய்வின் ஒரு பகுதியாக 7 காகங்கள் மட்டுமே வலையில் சிக்கினாலும், ஒரு கட்டத்தில், சுமார் 47 காக்கைகள் தன்னை பார்த்து வெறுப்பை வெளிப்படுத்தியதையும் மார்ஸ்லஃப் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது.