நமது நிருபர், பாலாறு மீடியா
சென்னை, நவ. 6: கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினாலான கூண்டுப்பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும்.
இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதுபோல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை 2025ம் ஆண்டு முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.