பத்மபிரியா கார்த்தி, அயலக நிருபர், பாலாறு நியூஸ் மீடியா.
கத்தாரில் உள்ள மிகப் பெரியக் குழுவான ‘தமிழ்ச் சிங்கப் பெண்கள் சமூகம்’, கத்தார் புனே பல்கலைக் கழக அரங்கில் பாரம்பரிய பொங்கல் விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்தியது.
கத்தார் சிங்க பெண்கள் கமிட்டி பெண்களே நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணம் என நிகழ்ச்சியை பார்வையிட்டோர் வெகுவாக பாராட்டினர். இந்த மாபெரும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்துகொண்டன.
இந்த பொங்கல் விழாவில் குழந்தைகள், பெண்கள், குடும்பத்தினருக்கான பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நிறைந்திருந்தன. குறிப்பாக மங்கையர் பலர் குழுவாக இருந்து கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். சிறுமிகளின் கலாசார நடனமும் சிறப்பாக நடந்தது.
டெல்லி பப்ளிக் பள்ளியின் இயக்குநர் கோபி வரதன், டாக்டர் கிம்ஸ் ஹெல்த் தலைமை மருத்துவ அதிகாரி நௌஃபல் ரிஸ்வான் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.
டெல்லி பப்ளிக் பள்ளியின் தலைமை தமிழ்த் துறையின் ஆசிரியை வாசுகி சிறப்புரையாற்றினார். சிங்கப் பெண்கள் குழுவினர் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் பாராட்டு விழாவை வழங்கினர்.
விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தத்தில் விழா கோலாகலமாக நடந்தேறியது. கடல் கடந்து தமிழர்களின் கலாசார நிகழ்வை எடுத்துக்காட்டியதாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.