சென்னை, நவம்பர் 08:
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த (8- 11 – 1680) தினம் இன்று .
கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்தவர், அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர், தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு.
இவருக்குத் தமிழ் பயிற்றுவித்த ஆசிரியர் ‘விறலி விடு தூது’, ‘கூளப்ப நாயக்கன் காதல்’ இயற்றிய விஸ்வகுல பெரும்புலவர் சுப்பிரதீபக் கவிராயர் ஆவார்.
தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரைத் தனித்தமிழில் வைத்துக் கொண்டார்.
தமிழில் உயிர் எழுத்துகளின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள். அவற்றின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார். இது அந்நாளில் உருவாகியிருந்த எழுத்து அச்சு முறைக்குத் தேவைப்பட்டது.
தமிழில் தேம்பாவணி, பரமார்த்த குரு கதை உள்ளட்ட 23 நூல்களை எழுதியுள்ளார். 9 மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67ஆவது வயதில் மறைந்தார் வீரமாமுனி.
குறிப்பிட்ட பிரிவே தமிழாண்டு வந்த நிலையை மாற்றியமைத்த அறிஞர்களில் ஒருவர்.
எழுத்தில் சீர்திருத்தம் செய்து எல்லோரும் படிக்க வழிவகை கண்டவருள் ஒருவர்.
வெளிநாட்டில் பிறந்தாலும் தமிழனாய் உருமாறித் தமிழ் வளர்த்த பெரியார்.
அகராதி படைக்கும் அளவிற்கு அளப்பரிய புலமை பெற்ற மனிதர்.
செய்யுள்களில் சிலம்பம் ஆடிவந்த நாட்டில் முதன்முதலாய் உரைநடையைக் கொண்டுவந்து பாமரரும் படிக்கும் வண்ணம் கதையிலக்கியம் தோற்றுவித்த உரைநடையின் தந்தை.
தமிழையும் தமிழர் பெருமையையும் உலகறியச் செய்த மொழிபெயர்ப்புத் துறையில் தனித்து விளங்கும் சான்றோன்.
மதம் பரப்ப வந்தாலும் மதுரத்தமிழால் மயங்கி அதற்கு மாண்புகூட்டித் தமிழ் பரப்பிய தகைமையாளன்.
மேட்டுக்குடியிடமிருந்து விடுவித்து நாட்டுக்குடியிடம் தமிழை நகர்த்திய ஒருவன்.
இத்தகு பெருமைவாய்ந்த உண்மைத் தமிழனை இனம் கண்டு ஒவ்வொரு கனமும் போற்றுவோம்.!
தமிழ்நண்பன் பதிப்பகமும், தமிழ் நண்பன் இணையமும் இம் மாமுனியை வாழ்த்துகிறது.!!